Friday, 15 July 2016

கிருஷ்ண லீலா!-12

கிருஷ்ண லீலா!-12

ஸ்நானம் செய்ய மறுத்தல்.

கிருஷ்ண லீலையினை கேட்பவர்கள் ,மெய்மறந்து நின்றனர்.
கோபிகைகள்,கண்ணன் லீலையினை பெருமையாக பேசினர்
வீதியிலே ஒரு கோபி,பானையுடன் செல்லும் மற்றவளை அழைத்து,
காண்பதற்கு அரிய காட்சியினை காட்டி மகிழ்ச்சியினை பகிர்ந்தாள்

அன்னை யசோதை,வரமாக வந்த வரதனை வலிய அழைக்கின்றாள்,
 தைலம்,அரப்பு,வாசனை பொடிகளை தன் பின்னே மறைத்து வைத்து,
என் அருமை மோகனனே,என் உயிர் மூச்சே,அழாமல் நீ வந்திடுவாய் 

நறுமணம் கொண்டு நின் மேனி மிளிர்ந்திடவே நீர் வார்த்துக்கொள்வாய் 

 வெண்ணையும் ரொட்டியும் காய்ச்சிய பாலும் காத்திருக்கு கண்ணையா 

சந்தனமும் பன்னீரும் நின் மேனிதனை குளிர்வித்திடும்  பொன்னையா,
கருத்த நின் மேனியை பொன்மயமாய் ஆக்கிடுவேன் நீ வா என்னையா 

கொஞ்சி,கெஞ்சி நீர்வார்க்க அன்னையவள் அழைத்து நின்றாள் 

அன்பாக அழைக்கும் காரணம் தெரிந்தவுடன் தவியாய் தவித்திட்டான்,
முற்றம் முழுவதுவும் உருண்டு,பிரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்திட்டான் 

பாற்கடலின் வாசன் நீர் வார்க்க அடம் பிடிக்கும் காட்சிதனைக் கண்டு 
தேவரும் முனிவரும் கந்தர்வரும் விண்ணவரும் அதிசயித்திருந்தனர் 

கதை கேட்ட  கண்ணன்

விஷ்ணு புராணம் கேட்க மூவுலகும் தவமிருக்க  அவன் தன் 

அவதாரக் கதைகளை அகிலமெல்லாம் நாளும் ஜெபித்திருக்க
யது வம்சத்தில்  வசுதேவன் மகனாக பிறப்பெடுத்த தெய்வம் 

தன் ரகுவம்ச ராமகாதையை அன்னையிடம் செவிமடுத்தான் 



யசோதையின்  மடியினிலே வீற்றிருந்து  ராமகதை கேட்டிருந்தான் மாயக் கண்ணன் 
அன்னை மனம் அறிந்திட்ட ஆனந்த ரூபன் ஊம்,கொட்டி கதை கேட்க உடன் பட்டான்,

 இப் புண்ணிய அயோத்தி நாட்டினிலே தசரதன் எனும் மன்னன் ஆண்டுவந்தான்,
சூர்யகுலமாம் தன் ரகுவம்சம் விளங்க தசரதன் தவமிருந்தான் தவப்புதல்வனுக்காய் 


புத்திர யாகம் செய்து வரமாக பிள்ளை பேரை பெற்றான்.
தசரதனின் குலம் தழைக்க வந்தன  வைரங்கள் நான்கு

ராம,பரத,லட்சுமண ,சத்ருக்கன் என்ற நாமங்கள் கொண்டு 
அனைவரிலும் மூத்தவன் ,முன்னவன் ,புருசோத்தமன் 

பண்பிலே சிறந்தபார் புகழும்  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி

ராமனுக்கு தம்பியாய்  மூன்று ரத்தினங்கள், அன்னையாய் மூன்று முத்துக்கள் 
சிவதனுசை தான் ஒடித்து ,ஜனகர் மகள் ஜானகியை கைத்தலம் பற்றினான் 
என ராமகாதை சொல்லி ராவண சம்ஹாரம் ,ராமனது பட்டாபிசேகம் என 

அன்னை அடுக்கிவந்த கதை கேட்டு ,லட்சுமணா எடு என் கோதண்டத்தை 
என நந்த நந்தன் தனை மறந்து இயம்பி நிற்க பிரம்ம ரகசியத்தை அறியா அன்னையவள் தான் சொன்ன கதையின் பாதிப்பே இது என எண்ணுகிறாள் 
கதை கேட்டு உறங்கிட்ட மகனை கண்டு மனம் நெகிழ்ந்திருந்தாள் 


அடுத்த அசுரவதம் 
தான் மகனாய் வந்த அதிசயம் இவனோ என நினைவில் மூழ்கினால் 
முதன் முதலாய் மனை விட்டு மாயவனை எடுத்து சென்ற நாள் அது 
அந்நாளும்  அதிசயம் அநேகமுற்ற நாள் என்பதறியாமல் அவள் 
கோகுலத்து கோபியரை அழைத்துக்கொண்டு யமுனை வந்தாள் 

 மங்கள ஸ்நானம் செய்வித்து தாலாட்டி தூங்க வைத்தாள் 

மாடுகள் பூட்டாத வண்டியின் அடியினிலே தொட்டியிட்டு படுக்க வைத்தாள் 
மற்றவரை கவனிக்க சற்று நேரம் சென்றிருக்க ,குழந்தை வீரிட்டு அழுதது 
தன் சின்னச்சிறு கால்களால் வண்டியினை பதிவிசாக உதைத்தது,
பறந்து சென்ற வண்டியது அந்தரத்தில் ஆட்டம் ஆடி ஆவிதனை விடுத்தது 

மாமன் அவன் கம்சன் தன் மருகனை மாய்க்கவென்றே அசுரனை அனுப்ப 
சகடாசுரன் வண்டியாய் மாற்றுரு கொண்டு கண்ணனை கொள்ள காத்திருந்தான் 
காலன்  காத்திருந்தான் அசுரனுக்காய் கண்ணன் திருவடியில் மறைந்திருந்தான் 

துட்டனுக்கு துட்டனாய் தூக்கி எறிந்த வண்டியில் துடித்து  மாண்டான் அசுரன்  
 துட்ட சக்தி இதுவென மந்திரம் சொல்லி மாயவனை காத்து நின்றாள் அன்னை.


கண்ணனை கவர்ந்து செல்ல திருணாவர்த்தன் என்ற அரக்கன் வந்தான் 
வீட்டை விட்டு வெளியேறி விண்ணளவு செல்லும் வரை எல்லாம் சரிதான் 
விண்ணில் விரையும் போது விண்ணளந்தான் கணம் மிகுதியாய் கணத்து விட  
கணம் தங்காமல் கண்ணனை கீழே தள்ளிவிட முயற்சி செய்தான் மூர்க்கன் 
அவன் கழுத்தை இருக பற்றி நின்றான் பரந்தாமன் பளு தாங்க இயலாத 
 அரக்கன் அரற்றி அக்கணமே ஆகாயம் விட்டு புவியில் வீழ்ந்து உயிர் விட்டான் 

நாமகரணம் 
யாதவர் குலகுருவாம் கர்க்கமகரிஷி,நாமகரணம் சடங்கு செய்ய கோகுலம் வந்தார்
நந்தரும்,யசோதையும் அன்போடும்,பக்தியுடனும் வணங்கி கர்க்கரை வரவேற்றனர்
எளிய முறையில் வைபவத்தை வைக்க நந்தருக்கு ஆலோசனை சொன்னார் குருவர் 
ரோகிணியின் மகன் மூத்தவன் நற்பண்புகளால் மற்றவரை மகிழ்விப்பான் ராமன் 

 பலமிக்க மன்னவன்  எனவே பலராமன்,இரு குடும்பத்தை இணைப்பதனால் சங்கர்ஷன் 

யசோதை மகன்  இளையவனை நோக்கி கடவுளின் அவதாரம் என அறிந்து வணங்கி  
கருமை நிறம் கொண்டதனால் கிருஷ்ணன்,கண்ணன் என்றும் பெயர் சூட்டி,
இறைவனுக்கு பெயர் சூட்ட தாம் பெற்ற பேரினை தம் அகத்துள்ளே மகிழ்ந்தார். 
மகனின் நினைவலையில் முழ்கி திரும்பி வரும் முன்னே மகனும் விழித்திருந்தான்.
யசோதை தாயே என்ன தவம் செய்தாய் என எங்களுக்கும் செப்புவாய் நீயே! 

Wednesday, 30 July 2014

கிருஷ்ண லீலா!-11

கிருஷ்ண லீலா!
பக்தர்களை பரவசிக்கும் பெருமாள்,பாற்கடலில் சயனித்திருக்கும் திருமால்
நாராயண எனக் கூக்குரலிட்ட கஜேந்திரனையும் காத்திட்ட கார்மேக வண்ணன்.
மங்கையருள் மாணிக்கமாய் திகழ்கின்ற தேவகியின் திரு வயிறு உதித்தவன்,
தாய்மையின் திருஉருவாம் யசோதையிடம், கொஞ்சி மகிழ மடி புகுந்தவன்,

கெட்டிதயிரை கடத்தில் இட்டு ,மதத்தை அதன் நடுவில் நிறுத்தி சரடை கொண்டு 
இருபுறமும் இறுக்கி பிடித்து இழுத்து விட்டு லாவகமாய் அன்னை தயிரை கடைய 
பாற்கடல் கடையும் பொழுது கூர்மாவதாரம் கொண்டு மலையை  தாங்கியவன் 
பசி தாளாமல் கண்கள்  கசக்கி அதரம் பிதுக்கி செல்ல சினுங்கல் லீலை புரிய 

ஏதும் அறிய அன்னை நல்லாள் செய்யும்  தொழில் விட்டு சனத்தில் விரைந்தாள் 
மகன் தனை தூக்கி மடியில் நிறுத்தி  கண்ணே கனியமுதே என கட்டியணைத்தாள் 
சற்று கணம் பொறுப்பாய் மகனே வெண்ணை திரண்டு வரும் நல்  வேலை இது என 
நறுமணம் கமழும்,பசும் வெண்ணை வழித்து அழுத வாயில் புகட்டிவிட்டால் 

வெண்ணை உண்ட கண்ணன் மகிழ்வில் தானும் மகிழ்ந்து இன்னும் கொஞ்சம் 
அவன் வாயில் வைத்து அவன் சுவைப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்ந்து என்
செல்லமே கண்ணப்பா ,இதை உனக்காக செய்து வைத்தேன் செல்லப்பா.
என் நிகரில்லா செல்வமே கண்ணையா உன் சிரித்த முகம் இங்கு காட்டையா!


பால லீலா!
ஆதிசேசன் ஆயிரம் தலைகளினால் பாடினாலும் ,முடிவற்றது அவன் பெருமை,
ஆயிரம்,ஆயிரம்,உபதேசங்களை தன் பவள வாயினால் உதிர்த்த மணிவண்ணன்,
யசோதை நந்தரை  அன்னை தந்தையென்றும்,பலராமனை அண்ணாஎன்றும்,
அழைக்க பழகியிருந்தான் ஆராவமுதன் என பெயர் பெற்ற ஆயர்பாடி மன்னன் 

கண்ணன் அவன் நந்தரின் இல்லத்தில் நடுவில் உள்ள பளிங்கு மாளிகை  முற்றத்தில்  
தன் சின்னஞ்சிறு பாதம் தூக்கி தமையனுடன் ஆடுகின்றான் ,மழலையில் பாடுகின்றான் 
வீதி சென்று கருப்பு,வெள்ளை பசுக்களை அதன் கன்றுகளை பெயரிட்டு அழைகின்றான்.
வீட்டில் உள்ள வெண்ணைதனை,கைநிறைய அள்ளி வாயில் வைத்து சுவைக்கின்றான் ,

 தன் பிம்பம் தனை,மணி மண்டபத்தில் பார்த்து பெரும் மகிழ்ச்சி ஒலி எழுப்புகின்றான்,
கொஞ்சும் சலங்கை மணி ஒலிக்க ஓடிசென்று அவனுக்கு அவனே முத்தமிடுகிறான் 
அன்னை யசோதையவள் தன் மைந்தனுக்கு பாலுட்ட பலவிதமாய் முயலுகின்றாள் 

வெண்ணை உண்டு ருசித்த மகன் தன் அன்னையிடம் பாலினை மறுத்தளித்தான் 

பால் நிறைய குடித்தால் தான் பெரியவனாய் ஆகிடலாம் எனஅன்னையவள்  புகட்ட,

அதனை  மறுக்கும் மைந்தன் இவிதமாய் பல புகார்கள் இயம்புகின்றான் தாயிடம் பாலருந்துவதால்  அண்ணாவைப்போல் பெரியவனாய் ஆகிடலாம் என்று சொன்னாய்,
கால்கள் கரும்பாம்பெனவே தரையினில் ஊன்றி நின்றிடலாம்  என்றும் சொன்னாய்,

இவ்வளவு பால் குடித்தும் சிறியவனாய் தான் உள்ளேன்,அண்ணனை போல் இல்லை,
நீ சொன்னது போல் ஒன்றும் ஆகவும் இல்லை,
நீ ருசியற்ற பச்சை பாலை தருவதனால் 

அதை குடிப்பதிலே ப்ரியம் ஒன்றும் இல்லை,எனவே சுவையான பட்சணம் தந்திடுவாய் 
நன்றாக சமைத்த சுவையான ரொட்டியும் ,வெண்ணையும் தருவாய் என் அன்னையே

செப்பு வாய் திறந்து ,மழலை மொழியினிலே மைந்தன் சொல்ல தனை மறந்து 
தன் மெய்யும்  மறந்து கேட்டு சிலைஎனவே நின்றால் யசோதை தானே!

Tuesday, 22 July 2014

கிருஷ்ண லீலா-10

கிருஷ்ண லீலா-10


கண்ணன் தவழ்தல்;
முகுந்தன் முன்னங்கால் மண்ணில் பட கைகளை கூட்டி தவழ்கின்றான் 
நந்தர் தம் மாளிகையில் செம்பொன் தூண்கள் சூழ் நடு முற்றத்தில் 
கைகளை முன்னால் வைத்து,கால்களை அதனுடன் கூட்டி தவழ்கின்றான்


அவன் அசையும் பொழுதினிலே இடைதனை அலங்கரித்த மேகலை ஒலி எழுப்ப 
தான் நகரும் அழகினை தானே தூணில் கண்டு குதூகல குரல் எழுப்பினான் 
மற்றொருவன் துணையாய் விளையாட கிடைத்தான் என்று களித்திட்டான் 

எதிர் தவழ்ந்த ,தன் பிம்பம் நோக்கி,பால் பற்கள் தெரிய நகைத்தான்.
தன் மகன், செய்கை கண்டு மனம் மகிழ்ந்த அன்னை புன்னகை பூத்தாள்.
பரம்பொருளே,தரையினில் தவழ்ந்திட பூமித் தாயும் சிலிர்த்தாள் 





















உலகம் காட்டல்
தவழ்ந்த கண்ணன் ,தவழ்ந்த படி, படி  தாண்டி வீதியில் இறங்கிட்டான் 
தாய் காண பொழுதினிலே பிடி மண்ணை தன் செம்பவள வாயில் இட்டான்.
தாயவள் தன் மகனின் வாய் நிறைத்த மண் துகளை கண்டு விட்டால் 
கம்பெடுத்து,வேகமாய் விரைந்து வந்து ,தன் மகனை அதட்டி கேட்டாள்


ஆவென காட்டு,மண் அள்ளி வாயில் போட்டது உண்மைதானே என்று,
தாயிடம்,ஏதும் அறியா பாலகனாய் பொக்கை  வாய்  திறந்துக் காட்ட,
அதனுள்ளே ஈறேழு  உலகும் தெரிய,தாயும்,மகனும் சேர்ந்து தெரிய,
தலை சுற்றி,கண்மூடி ,நாவரண்டு மூர்சையுற்றால் நந்தன் ராணி.


நடை பயிலுதல்.

அன்னையவள் யசோதை,தன் கண்மணிக்கு நடை பயிற்றுவித்தால் .
மூன்று  உலகினையும் தன் மூன்றே  அடிகளினால் அளந்தவன் அவன் 
மகாபலியின் சிரசினிலே தன் பாதம் வைத்து பாதாளம் அனுப்பியவன்.
இன்று,அன்னையவள் கைபிடித்து ஒரு ஒரு அடியாக நடை பயின்றான்.


வைக்கும் அடி தடுமாறி,கீழே விழுந்திடுவனோ, புண்படுவனோ,என  பரிதவித்து கண்ணன் அவன் கைபிடித்து நடத்துகிறாள் மெல்ல மெல்ல பயிற்றுவித்தாள் 
யசோதை ,தத்தி தத்தி நடந்த மகன் நேர்நடை நடக்க கண்டு மகிழ்ச்சியுற்றாள் .
தான் கண்ட காட்சியினை,தன் மனாளனுக்கும்,மற்றவருக்கும் காட்டுகிறாள்.


தன் மூத்த மகன் பலராமனை அழைத்து, தம்பியுடன் விளையாட பணிக்கின்றால்.
தயங்கி,தயங்கி நடை பயின்ற கண்ணன் முற்றம் வரை சென்று விட்டு திரும்புகிறான் .
நிலை படியை தாண்ட ,முயன்று கீழே விழுந்து எழுந்தான் மூஉலகம் அளந்த பெருமாள்.
தன் மகனின் முயற்சியினை கண்ணுற்ற தாயவள் ,கைபிடித்து படியிறங்க படிப்பித்தால் .


யசோதையுடன் கண்ணின் விளையாட்டை கண்டு மகிழ்ந்தது அந்த வானுலகம் 
என்ன தவம் செய்தனையோ யசோதை என வியப்புற்றார் அமருலகின் தேவர் 

அவள் பெற்ற வரத்தினை மெச்சி மெய்சிலிர்த்தனர் மெய் ஞான முனிவர் 
இவை ஏதும் அறியாத அன்னையவள் மகன் மேல் கண் பதித்து காத்து நின்றால்.

Monday, 14 July 2014

கிருஷ்ண லீலா-9

கிருஷ்ண லீலா-9
யசோதையின் ஏக்கம்.
அசுரர்களை,அரை நொடியில் சம்ஹாரம் செய்யும் அனந்த மூர்த்தி அவன்
மூர்த்தி சிறிதாய் இருக்கும் போதே ,கீர்த்தி பல பெற்ற பெருமாள் அவன்
இத்தனை சிறப்பினையும் வாய்க்கபெற்ற தன் மகனை அறியாத அன்னையவள்
தனது அன்பு மகன் பெரியவனாய் வளர்வது எந்நாளோ என ஏங்குகின்றாள்!


பக்கத்திலே திருமகள் வீற்றிருக்க பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன்
இடையவரின் இல்லத்திலே நாற்கால் தொட்டிலில் சத்தை சயனித்திருக்க 
முட்டி மண்ணில்பட கரங்கள் தரையில் ஊன்ற,நாலுகால் பாய்ச்சலாக தன் 
மகவு நந்தர் இல்லமதில் தவழ்ந்து வரும் அழகை காண ஆவலுற்றால்.


மூவுலகும் பாதத்தால் அளக்க மூன்றாம் பாதம் மகாபலி தலையில்வைத்தான்,

வாமன மூர்த்தி அவன் தத்தி,தத்தி நடக்கும் நடை காண ஏக்கம் கொண்டாள் 
உபதேசம் உதிர்த்த பவளவாய் அச்சுதன் அமரர் தொழும் லட்சுமியின் நேசன்.

திருவாய்கொஞ்சு மழலை மொழியால் அம்மா என அழைக்க தவமிருந்தால்.


அற்புதம் ஆயிரம் செய்யும் நெடிந்துயர்ந்த பெருமாள் என பெயர் பெற்றவன் 
கை கால் உதைத்து ,அழுதுப் புரண்டு அண்டம் நடுங்க அடம் செய்வானோ
அனைவர்க்கும் அனுதினமும் படியளக்கும் வைகுண்ட வாசவன் அவன் 
தன் 
நீல வண்ண பிஞ்சு கையால்,சிந்தி சிதறி ,அன்னம் அள்ளி அள்ளி உண்பானோ

என தன் உயிரெனவே போற்றி வளர்க்கும் தன மகனை சிந்தையில் நிறுத்தி 
யாவையுமே கற்பனையில் கண் குளிர கண்டு இன்புற்றாள் அன்னை யசோதை
அவள் தன் அகத்தில் கண்ட காட்சி தன அகம் தனில் அரங்கேறும் நாளும் வந்தது
 என்ன தவம் செய்தனை யசோதை மையா என தேவரும் முனிவரும் போற்றினர்.
கண்ணன் வளர்தல்
குப்புற விழுதல் 
மூன்று மாதம் முடியும் முன்னே  உடல் தூக்கி குப்புற விழுந்தான் கண்ணன்
இதை கண்டு,தேங்காய் தலை சுற்றி திருஷ்டி கழித்து உடைத்தால் அன்னை.
வயிறு அமுங்கி வாய் மூக்கு தரையில் பட்டு அடிபடவே அழுதான் கண்ணன் 
தான் கற்ற முதல் வித்தை தனை விடாமல் பலமுறை முயன்றான் வண்ணன்
எத்தனை முறை விழுந்த போதும் சலிக்காமல் பூ போல திருப்பி விட்டால்அன்னை.

கண்ணன் அமுதுன்னல் 
ஆவணி அஷ்டமியில் அவன் பிறப்பு,ஆறுமாதம் கழிந்தது ஆயர்பாடி வந்தடைந்து.
இன்று தன் குழந்தைக்கு முதல் அன்னமிட குருவாயூர் சன்னதி அனைவரும் நாட.
அன்று அன்னை பரந்தமனுக்கே அன்னமிடஅனைவரையும்அழைத்திட்டாள் 
அன்னம் 
ஒருவாய் அவனுள்ளே சென்று அடைக்கலம் புக அவனி அடைந்தது நிறைவு!


அன்புசார் கோபரும் கோபியரும் நந்தரில்லம் வந்தனர் 
கண்ணன் அவன் பசியாற தன் மனம் நெகிழ்ந்தனர்.
ஆனந்தமாய் ஆட்டம் ஆடி வாழ்த்து பாடி மகிந்தனர் 
நந்த மைந்தன் சுந்தர முகம் கண்டு கழித்தனர்!

Monday, 16 June 2014

கிருஷ்ண லீலா-8


ஆலிலையில்  கிருஷ்ணன்,

நந்தரின் இல்லமது,அமருலகின் தேவரெல்லாம் வணங்கும்,
பாற்கடல் பள்ளிகொண்ட பரந்தாமனின்  இருப்பிடமானது.
முற்றத்திலே உள்ள தூளியிலே சயனித்திருந்தான்,கண்ணபிரான்,
கை கால் ஆட்டி,பொக்கை வாய் சிரிப்புடனே,அறியாபிள்ளையாய்!


தன் கால் கட்டை விரல் தூக்கி வாயினிலே வைத்தான்,கண்ணப்பன்,
கடல் அலை சீற்றமாய் சீறியது வானம் வரை ,புவி நடுநடுங்கியது,
மேகம் கடும் கர்ஜனை செய்ய, வானில் வண்ண கோலமிட்டது மின்னல்.
கணப்பொழுதில் வந்த மாற்றம்  ஏதேன அறியாமல் கலங்கியது ஏழுலகும் 

 நாரதரும் என்ன இந்த விபரீதம் என நான்முகனை வினவ,தேவரெல்லாம் 
கயிலை நோக்கி அபாய கரம் நீட்ட,சிறுமுறுவல் தந்து புதிர் அவிழ்த்தார்,
மால் ஒரு பாகாம் கொண்ட சங்கரனார்,இது தன மனையாளின் சோதரனார் 
விளையாட்டை செய்த லீலை என்று.ஏதும் விளங்காமல் விழியுயர்த்த.

கால் கட்டைவிரல் தனை வளைத்து,தன் அதரம் தனில் வைத்து சுவைத்ததனால் 
வந்த விளைவு இது, ஆலிலையில் கிருஷ்ணன் ரூபம் இது, இந்த வடிவம் 
தாங்கி கண்ணன் இருந்தால் பிரளயம் வரும் என்றொரு ஐதீகம்,நொடிபொழுதில் 
மாயம் செய்த மாயவன்,விரைவினிலே விடுவித்தான் விரலை வாயை விட்டு.




காக அரக்கன்

கம்சன்,தன் உயிர் மேல் கொண்ட பற்றின் காரணமாய் 
பூதனயை அனுப்பிய முதல் முயற்சி தோற்ற பின்னே 
காக்கை வடிவம் கொண்ட அரக்கனிடம் ஒப்புவித்தான்,
பாலகனை பலிக்கொண்டு வரும் பெரும் பணியை.

சிறு பிள்ளை விணை தீர்க்க நான் வேண்டுமோ என இளப்பமாய் 
எண்ணி விரைந்திட்டான் காக்கணும் இடையர்கள் அகம் நோக்கி.
நந்தரின் மாளிகை  மேல் பறந்து வந்தமர்ந்தான் முற்ற மதிலினிலே.
அக்கனமதில் உறங்கிட்ட மகனை விட்டு ,அன்னையவள் அகன்றிருக்க,

தக்க சமயம் என இறங்கிட்ட அரக்கன், கண்ணன் அருகினிலே சென்று,
தன் அலகினாலே கொத்த முற்பட்டான்,அவனை கையால் திருகிட்டான் மாயன்
கண்ணன் கையில் குற்றுருயிராய் இருந்த காகன் கரைந்திட்டான் உயிர்பிச்சை 

கேட்டு,மனம் இறங்கிட்ட மாதவன் காகனை  திருப்பி அனுப்பிட்டார் கம்சனிடம்,

காக அரக்கன்,அலறி துடித்தபடி ,விரந்திட்டான் மதுரா நகர் நோக்கி கம்சனிடம்.
கோகுலத்தில் இருப்பது, மானிட குழந்தயன்று,தெய்வமே மனிதனாய் வந்தது,

இனி,அதனிடம் நம் ஆட்டம் செல்லாது,நம்மினமே அழியும் அவன் கையால் என்றான்!

Wednesday, 11 June 2014

கிருஷ்ண லீலா-7


பூதனை வதம்  


மருகனை காணாமல் மருகினான்  மாமனாம் கம்சன் மதுராவில்.
சோதரி தொலைத்த மகனை சீரட்டவோ, இல்லை சிரம் வெட்ட.
கோகுலம் கொண்ட கோலாகலம் சொல்லாமல் சொல்லியது 
இங்கு குழந்தை பிறந்து மறைந்த  அன்று அங்கு மலர்ந்ததை 

தன்  உயிர்க்கு காலன் என ஐயம் கொண்டாலே போதும் கம்சனுக்கு 

அக்கனம்  பிறந்த அத்தனை சிசுவையும் சிரமறுக்க அனுப்பிவைத்தான் 
பூதம் போல் உரு கொண்ட அரக்கியாம்,மாயம் பல கற்ற மாபாதகியை 
குழந்தை தனை யமனுலகம் அனுப்பிவைக்க, ஏவினான் பூதனையை.

கோரா முகம் கொண்டவள் கோமள வல்லியாய் கோலமிட்டு 
அழகு சுந்தரியாய்,கபட உரு கொண்டு,கோகுலத்தில் உட்புகுந்தால் 
பால் சுரக்கும் ,புண்ணிய தனங்களிலே விஷம் தடவி விரைந்திட்டாள்,
கண்ணன் தனை காண வரும் மாது போல் ,அவனருகே அமர்திட்டாள்,


யசோதையின் பாக்கியத்தை பற்பல சொல்லால் வாயார புகழ்ந்திட்டால் ,
தன் மகவுதன் புகழ்ச்சியினால் மயங்கிட்ட அன்னை அரக்கியென்று  

அறியாமல் முழுமனதாய் நம்பி,உறங்கும் மகனை விட்டு சற்றே 
அகன்றிட்டாள் நேரம் செல்ல,செல்ல,ஒவ்வொருவராய் வெளி செல்ல,

யாருமற்ற நேரத்திலே,மாதவனை ஏந்திட்டால் தன் கரத்தினிலே 
தன் விஷம் தோய்ந்த மார்பினின்று பால்தனை புகட்டிட்டாள் 
பால் மட்டும் அருந்தும் பாலகனா இந்த மாயன்,பாலுடனே சேர்த்து 

அவள் உயிர் தனையும்  உறிஞ்சிட்டான்,அலறிட்டாள்  அரக்கி.


தன் உயிர் போவது உறுதி என அறிந்திட்ட பூதனை,குழந்தையை
குழந்தையென வந்த தன் காலனை விலக்கவும் இயலாமல் அவனுடனே 
வீட்டை விடுத்து  காடு புகுந்தாள்,தன் உயிர் போகும் வேளையில் 

வேதனையில் வீறிட்டாள் ,வீழ்ந்த பின்னே,தன்  உருவம்  பெற்றாள், 

மலைபோல் வீழ்ந்திருந்த பூதனை மேலே கண்ணன் வீற்றிருந்தான் 
அவதார நோக்கில் முதல் பலி அரங்கேற்றி முறுவல் புரிந்திருந்தான் 
அன்னையவள் அலறி வந்தநிலை கண்டு தானும் சேயாகி சினுங்கிட்டான் 
நிகழ்ந்த லீலை அறியாத யாதவ இனம் அதிர்ச்சியில் உறைந்திட்டது.



Wednesday, 4 June 2014

கிருஷ்ண லீலா.6

யசோதையின் தாலாட்டு.

ஆயர் பாடி மாளிகையில் மாயவனை துயில செய்ய தொட்டிலிலே இட்டு,
அவன் மலர்முகத்தில் கண் பதித்து தாய்மை பொங்க முத்தமிட்டு,அள்ளி 
அணைக்கின்றாள் ஒரு பொழுது,கொஞ்சி குலவுகிறாள் மறுபொழுது !
கொஞ்சுமொழி வார்த்தைகளால்,மெல்லிய குரலெடுத்து முனுமுனுத்தாள் 
தாலாட்டு பாடலிலே நித்திரையை அழைகின்றாள்அன்பான யசோதை!

நித்திரா தேவி நீ ,தச்சனமும் நில்லாமல் இப்பொழுதே வந்திடுவாய்.,

என்மகவுதனை  ஆரத்தழுவி நீ உன் வசமே பத்திரமாய் வைத்திடுவாய் 
அவன் கனவதனில் இனிமைதனை சேர்த்து இன்பமதை தந்திடுவாய்.
ஆயிரம் கோப,கோபியர் அவனை ஆரத்தழுவ ஆர்வமுடன் தவமிருக்க,
அவனருகே செல்வதற்கு நான் ரகசியமாய் உனை அனுமதிப்பேன் 

நித்திரை பெண்ணே நீ வேறெங்கும் செல்லாமல் என் அகம் வந்துவிடு 
என் செல்ல கண்ணையன் உன்னை ஆசையுடன் அழைக்கின்றான் 
தாமதம் இன்றி நீ தாவி அவனிடம் வந்துவிடு ,என அன்னையவள் 
ஆசையுடன் தாலாட்ட,தன லீலை தனை காட்ட தக்க தருணமிது என்று 
தன் இமை மூடி,அதரங்கள் சப்புக் கொட்டி பாவனை காட்டிட்டான் கண்ணையன் 

அன்னையின் அவள் தன் அழைப்பின் பேரில் நித்திரையும் வந்திட்டால்
கண்ணனிடம் தான் மயங்கி அவள் ,அவனிடமே சரணடைந்திட்டால் என 
கண்ணன் ,அவன் உறங்க கண்டு,யசோதை தன் தாலாட்டை நிறுத்தி,அருகே
உள்ளவரை அமைதி காக்க சைகை செய்து ,அனைவரையும் அனுப்பிவிட்டு,
வெளிச்சம் தனை மறைத்து விட்டு,பட்டு துகில் கொண்டு போர்த்திவிட்டு 

தன் மகன் எழுவதற்குள் மற்ற வேலை முடிக்க செல்ல யசோதைமுனைகையிலே,

செல்ல சினுங்கள்,சில செய்து,தனகத்தே அழைத்து கொண்டான் மாயக்கண்ணன் 
இதுபோலே,உறங்குவதும்,விழிப்பதுமாய்,மாதவன் விளையாடி ,தாய்மையிலே 
உறவாடி,வையகத்தில் இவள் போலே என தாய்மைக்கு ஓர்  பெயர் வழங்கி, யசோதை 
செய்த பாக்கியம் என்னவென்று பாரில் உள்ளோர் வியக்க வைத்தான் பரந்தாமன்!