பூதனை வதம்
மருகனை காணாமல் மருகினான் மாமனாம் கம்சன் மதுராவில்.
சோதரி தொலைத்த மகனை சீரட்டவோ, இல்லை சிரம் வெட்ட.
கோகுலம் கொண்ட கோலாகலம் சொல்லாமல் சொல்லியது
இங்கு குழந்தை பிறந்து மறைந்த அன்று அங்கு மலர்ந்ததை
தன் உயிர்க்கு காலன் என ஐயம் கொண்டாலே போதும் கம்சனுக்கு
அக்கனம் பிறந்த அத்தனை சிசுவையும் சிரமறுக்க அனுப்பிவைத்தான்
பூதம் போல் உரு கொண்ட அரக்கியாம்,மாயம் பல கற்ற மாபாதகியை
குழந்தை தனை யமனுலகம் அனுப்பிவைக்க, ஏவினான் பூதனையை.
கோரா முகம் கொண்டவள் கோமள வல்லியாய் கோலமிட்டு
அழகு சுந்தரியாய்,கபட உரு கொண்டு,கோகுலத்தில் உட்புகுந்தால்
பால் சுரக்கும் ,புண்ணிய தனங்களிலே விஷம் தடவி விரைந்திட்டாள்,
கண்ணன் தனை காண வரும் மாது போல் ,அவனருகே அமர்திட்டாள்,
யசோதையின் பாக்கியத்தை பற்பல சொல்லால் வாயார புகழ்ந்திட்டால் ,
தன் மகவுதன் புகழ்ச்சியினால் மயங்கிட்ட அன்னை அரக்கியென்று
அறியாமல் முழுமனதாய் நம்பி,உறங்கும் மகனை விட்டு சற்றே
அகன்றிட்டாள் நேரம் செல்ல,செல்ல,ஒவ்வொருவராய் வெளி செல்ல,
யாருமற்ற நேரத்திலே,மாதவனை ஏந்திட்டால் தன் கரத்தினிலே
தன் விஷம் தோய்ந்த மார்பினின்று பால்தனை புகட்டிட்டாள்
பால் மட்டும் அருந்தும் பாலகனா இந்த மாயன்,பாலுடனே சேர்த்து
அவள் உயிர் தனையும் உறிஞ்சிட்டான்,அலறிட்டாள் அரக்கி.
தன் உயிர் போவது உறுதி என அறிந்திட்ட பூதனை,குழந்தையை
குழந்தையென வந்த தன் காலனை விலக்கவும் இயலாமல் அவனுடனே
வீட்டை விடுத்து காடு புகுந்தாள்,தன் உயிர் போகும் வேளையில்
வேதனையில் வீறிட்டாள் ,வீழ்ந்த பின்னே,தன் உருவம் பெற்றாள்,
மலைபோல் வீழ்ந்திருந்த பூதனை மேலே கண்ணன் வீற்றிருந்தான்
அவதார நோக்கில் முதல் பலி அரங்கேற்றி முறுவல் புரிந்திருந்தான்
அன்னையவள் அலறி வந்தநிலை கண்டு தானும் சேயாகி சினுங்கிட்டான்
நிகழ்ந்த லீலை அறியாத யாதவ இனம் அதிர்ச்சியில் உறைந்திட்டது.
No comments:
Post a Comment