ஆயர் குல கொழுந்து
மதுரா நகரில் மாயவனும்,அவன் சோதரி மாயையும் மாயமாய் மறைந்திருக்க,
தாய் தேவகியின் அகம் விட்டு வந்த தேவகிநந்தன்,ஆயர்பாடி அரண்மனையில்
அப்போதுதான் பிறந்த பிள்ளை போலே வீரிட்டு அட்டகாசமாய் அழுகுரல் கொடுக்க
மயக்க நிலை மீண்ட நந்த ராணி, யசோதை, விழிதெழுந்தாள்,தாய்மை பொங்க!
அருகினிலே கருநீல வண்ணமாய் அழகிய ஆண் குழந்தை அழுதபடி இருக்க ,
நடந்த மாயம் ஏதும் அறியாள் இந்த மங்கை நல்லாள் !அருகிருந்த தன் மகனை
விழி மலர கண்டு மகிழ்ந்தாள் எத்தனை புண்ணியம் செய்தனவோ இந்த கண்கள் !
யுக,யுகமாய் செய்த தவப்பயனை பெற்றனவோ அவள் தன நயனங்கள் !
பார் போற்றும் பரந்தாமன் ,பருப்பொருளாய் பக்கத்தில் உற்றான்,அவள் மகனாய்!
பார்த்த விழி பார்த்த படி இருக்க,யசோதை கூவி அழைத்தாள் தன் மணாளனை!
ஆயர் குல கொழுந்தாம்,கண்ணனை,காண வந்தார் நந்த ராஜன் !நந்தன் அவர் தன்
கண்-அவன்,கண் நிறைந்த கண்மணி,பசித்த வயலுக்கு மழைபோல வந்தவன்!
தன் பிள்ளையாய் வந்த ஆயர் குலகொழுந்தை கண்டவுடன்,பேச மறந்து நா தழுதழுக்க,
கண்ணீர் மல்க ,உள்ளமெல்லாம் புலன்கிதம் அடைய,உடலெல்லாம் புல்லரிக்க,
நெஞ்சு மட்டும் மகிழ்ச்சி பொங்க,ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தார் நந்தகோபர்!
வம்சம் வளர்க்க வந்த பிள்ளை என,கண்ணுற்ற பெற்றோர் பெருமிதமுற்றனர்!
தங்களுக்கு ஒரு பிள்ளை தவப்பயனால் பெற்றெடுத்தோம் என பெற்றவர் மகிழ்ந்திருக்க.
அடுத்த தலைமுறைக்கு தலைவன் வந்துவிட்டான் என ஆயர்குலம் நினைத்திருக்க,
இந்த தரணியில் தர்மம் தவறாது பிழைத்திருக்க,அவதாரம் தாங்கி வந்தான் கண்ணன்!
அடாத செயல் புரியும் அரக்கர் கருவறுக்க,வைகுண்டம் விட்டு வந்தான் முகுந்தன்!
No comments:
Post a Comment