கம்சனின் கலக்கம் !
வராகமாய் புவனி சுமந்த புரந்தரனை ,சிரத்திலே சிந்தை இன்றி சுமந்து
வசுதேவர் யாதவர் வாழ் கோகுலம் சென்று செம்மையாய் திரும்பிவிட்டார்,
கண்ணனை அவ்விடம் விட்டு,மாயையை இவ்விடம் சேர்த்துவிட்டார் ,
சிறைக்கூடம் பழையபடி மூடிக்கொள்ள,விழித்து எழுந்தனர் காவலர்.
குழந்தை அழுகுரல் கேட்ட்க காவலன்,விரைந்திட்டான் கம்சனிடம் !
தேவகியின் எட்டாவது குழந்தை,கம்சனுக்கு எமனாவான் என்பது வாக்கு!
இதோ வந்துவிட்டது எட்டாவது,செய்தி அறிந்தவுடன் விரைகின்றான் கம்சன்.
என்ன ஒரு வேகமாய்விரைகின்றான் கம்சன்!தாய் மாமன் அந்த குழந்தைக்கு!
இந்த வேகம் தன் தங்கை மகவை கொஞ்சி மகிழவா?இல்லை !இப்படியும்
ஒரு பிஞ்சுதனை ,நஞ்செனவே நசுக்கி கொள்ளவே விரைகின்றான் நடக்குமோ!
தேவகி கலக்கமுற்றாள்,முன் எழுவர் சென்ற பாதை இதுவும் செல்லுமோ என்று?
கம்சன் வந்தான்,பிள்ளை தனை கையில் ஏந்தி,வீசிட்டான் சுவற்றை நோக்கி,
வீசிய பிள்ளை,மேலே உயர்ந்தது ,அந்தரத்தில் நின்றது,அழகாய் சிரித்தது
மாய தேவியவள்,மாயவனின் சோதரி,எச்சரிக்கை விட்டால் கம்சனுக்கே!
அடே!கம்சா!உன் அழிவு நெருங்கியது!உனை அழிக்கும் பிள்ளை நானல்ல!
அது பத்திரமாய் வளர்கிறது,வேண்டிய இடத்தில் என சத்தியத்தையும் உரைத்து
மாயமாய் மறைந்தது மாயை!மனதினில் கடும் பயம் உறைய,கடும் சொல் உதிர்த்து
பூட்டிய கதவு ,பூட்டியபடி இருக்க,இது எப்படி சாத்தியமென கர்ஜித்தான்
கடிந்திட்டான்,காவலரை,கலவரமாவது,இப்போது அவன் முறையானது!
தன் எதிரி எங்கே என தேடி,தேடி அலைகின்றான் கம்சன்.காண்பானோ மருகனை?
No comments:
Post a Comment