Tuesday, 22 April 2014

கிருஷ்ணா லீலா-5

கோகுலத்தில் குதூகுலம்!

தேவரின் கடவுள் ,அசுரரின் காலன்!லட்சுமியின் நேசன்,பாற்கடலின் வாசன்!
அவன் திரு நாமம் சொல்ல ஆயிரமாயிரம் காலம் தவம் செய்திடவேண்டுமென 
வானவரும்,ஞானியரும் பாற்கடலின் வாசலிலே ,பேட்டி காண காத்திருக்க,
முன்னம் அயோத்தி மக்கள் செய்த தவ புண்ணியமாய் ராமவதாரம் தந்தவன்!


இன்று கோகுலத்து மாந்தர் தம் துயர் களைய கிருஷ்ணாவதாரம் கொண்டான்!
ஆயர்குலம் என்ன தவம் செய்ததுவோ,பரந்தாமன் இவ்விடத்தில் வந்திடவே!
கோகுலத்து கோபி ஒருத்தி, தெருவெல்லாம் ஓடோடி சொன்ன செய்தி இதுதானே!
நந்தர் தம் மாளிகையில் ,நந்தராணி யசோதை,பெற்றெடுத்தாள் ஆண் மகவை!


அவன் பொன்னழகை பார்பதற்கு நம் கண்ணிரண்டு போதாதே !
அவன் மின்னும் கண்கள் விட்டு நம்மை மீட்டெடுக்க முடியாதே!
சுருண்ட கரும் கேசமது ,முகத்தில் வழியும் அழகுதனை கண்டு பிறவி பயண்,பெற்றிடவே,ஓடோடி வாரீர் !எம்குல கோபியரே!


கண்ணன் பிறந்த நற் செய்தி ,காட்டு தீ என கோகுலம் முழுதும் பரவியதே.
கோபர்களும் கோபியரும், கூடியதால், நிறைந்தது நந்தர் இல்லமதே!

ஒருவர் உள் செல்ல ,கண்டுவிட்ட மற்றொருவர் மகிழ்வுடன் வெளி செல்ல,
கண்டு வந்தவரின் வாழ்ததனை,தக்க முறையில்  பெற்று கொண்டு,


வந்தவரை உபசரிக்க,பாலும் தயிரும்,பானகமும்,நீர் மோரும் என,
வேண்டியவர்,வேண்டியபடி ,விதவிதமாய் மகிழ்வுடனே  உபசரித்து,
நடு,நடுவே தன் மகன் முகம் கண்டு ,பம்பரமாய் சுழலுகிறார் நந்த ராஜன்,
களைப்பு சிறுதும் முகம்தனிலே இல்லாமல் தாய்மையுடன் நந்தராணி!


கோபிகைகள் புடைசூழ,யசோதையவள் வீற்றிருக்க,தாயவளின் மடிதனிலே ஒய்யாரமாய் நந்தன் மகன்,பார் போற்றும் பரந்தாமன்,பச்சிளம் பாலகனாய் !
தாயன்பு என்பதிலே சுகம் கண்ட நாராயணன் மாற்றுமுறை எடுத்தான் நரனாய்!

சுற்றி நின்ற கோபியர்கள் திருமகளின் நாயகனை சிறப்புடனே அலங்கரித்தனரே!


ஒரு கோபி நெற்றியிலே செந்திலகமிட,மற்றொருத்தி கண் அதனில்  அஞ்சனமிட,
கைதனிலே வளையலும்,பட்டு வங்கி குஞ்சலமுடன் இட.பாதகமலத்தில் தண்டை இட இடையினிலே அரைஞான் கொடியிட,
 பட்டு சொக்காய் மஞ்சள் வண்ணத்தில் மின்னிட 
சிரம்தனில் முத்தும்,ரத்தினமும்,வைரமும் கோர்க்க பெற்ற வண்ண தலை பாகை இட

துஷ்டர் கண் தன மகனை தீண்டாமல் அன்னை யசோதை திருஷ்டி பொட்டு இட 
பூரண அலங்கார பூசனமாய்,பாலகிருஷ்ணன் முகம் கண்ட பின்னே, மெய் மறந்து 
கிழவர் முதல்,சிறுவர் வரை நின்ற நிலைதனை வர்த்தைதனில் வடிக்க இயலுமோ.
கிருஷ்ண பக்த சிரோன்மணிகள் மகாகவிகள் எழுத்து வரி கொடுக்க தவிக்கையிலே 
அதை மானசீகமாய் கண்டு மகிழ்திடவே உம்மிடமே விட்டு விட்டேன் முயன்றுடுவீர்!

       

       

Sunday, 20 April 2014

கிருஷ்ண லீலா-4


ஆயர் குல கொழுந்து 

மதுரா நகரில் மாயவனும்,அவன் சோதரி மாயையும் மாயமாய் மறைந்திருக்க,
தாய் தேவகியின் அகம் விட்டு வந்த தேவகிநந்தன்,ஆயர்பாடி அரண்மனையில் 
அப்போதுதான் பிறந்த பிள்ளை போலே வீரிட்டு அட்டகாசமாய் அழுகுரல் கொடுக்க 
மயக்க நிலை மீண்ட  நந்த ராணி, யசோதை, விழிதெழுந்தாள்,தாய்மை பொங்க!

அருகினிலே கருநீல வண்ணமாய் அழகிய ஆண் குழந்தை அழுதபடி இருக்க ,
நடந்த மாயம் ஏதும் அறியாள் இந்த மங்கை நல்லாள் !அருகிருந்த தன் மகனை 

விழி மலர கண்டு மகிழ்ந்தாள் எத்தனை புண்ணியம் செய்தனவோ இந்த கண்கள் !
யுக,யுகமாய் செய்த தவப்பயனை பெற்றனவோ அவள் தன  நயனங்கள் !


பார் போற்றும் பரந்தாமன் ,பருப்பொருளாய் பக்கத்தில் உற்றான்,அவள் மகனாய்!
பார்த்த விழி பார்த்த படி இருக்க,யசோதை கூவி அழைத்தாள் தன் மணாளனை!
ஆயர் குல கொழுந்தாம்,கண்ணனை,காண வந்தார் நந்த ராஜன் !நந்தன் அவர் தன் 

கண்-அவன்,கண் நிறைந்த கண்மணி,பசித்த வயலுக்கு மழைபோல வந்தவன்!

தன் பிள்ளையாய் வந்த ஆயர் குலகொழுந்தை கண்டவுடன்,பேச மறந்து நா தழுதழுக்க,
கண்ணீர் மல்க ,உள்ளமெல்லாம் புலன்கிதம் அடைய,உடலெல்லாம் புல்லரிக்க,
நெஞ்சு மட்டும் மகிழ்ச்சி பொங்க,ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தார் நந்தகோபர்!
வம்சம் வளர்க்க வந்த பிள்ளை என,கண்ணுற்ற பெற்றோர் பெருமிதமுற்றனர்!

தங்களுக்கு ஒரு பிள்ளை தவப்பயனால் பெற்றெடுத்தோம் என பெற்றவர் மகிழ்ந்திருக்க.
அடுத்த தலைமுறைக்கு தலைவன் வந்துவிட்டான் என ஆயர்குலம் நினைத்திருக்க,
இந்த தரணியில் தர்மம் தவறாது பிழைத்திருக்க,அவதாரம் தாங்கி வந்தான் கண்ணன்!
அடாத செயல் புரியும் அரக்கர் கருவறுக்க,வைகுண்டம் விட்டு வந்தான் முகுந்தன்!



Saturday, 19 April 2014

கிருஷ்ண லீலா-3


கம்சனின் கலக்கம் !
வராகமாய் புவனி சுமந்த புரந்தரனை ,சிரத்திலே சிந்தை இன்றி சுமந்து 

வசுதேவர் யாதவர் வாழ் கோகுலம் சென்று செம்மையாய் திரும்பிவிட்டார்,
கண்ணனை அவ்விடம் விட்டு,மாயையை இவ்விடம் சேர்த்துவிட்டார் ,
சிறைக்கூடம் பழையபடி மூடிக்கொள்ள,
விழித்து எழுந்தனர் காவலர்.

குழந்தை அழுகுரல் கேட்ட்க காவலன்,விரைந்திட்டான் கம்சனிடம் !
தேவகியின் எட்டாவது குழந்தை,கம்சனுக்கு எமனாவான் என்பது வாக்கு!
இதோ வந்துவிட்டது எட்டாவது,செய்தி அறிந்தவுடன் விரைகின்றான் கம்சன்.
என்ன ஒரு வேகமாய்விரைகின்றான் கம்சன்!தாய் மாமன் அந்த குழந்தைக்கு! 

இந்த வேகம் தன் தங்கை மகவை கொஞ்சி மகிழவா?இல்லை !இப்படியும் 
ஒரு பிஞ்சுதனை ,நஞ்செனவே நசுக்கி கொள்ளவே விரைகின்றான் நடக்குமோ!
தேவகி கலக்கமுற்றாள்,முன் எழுவர் சென்ற பாதை இதுவும் செல்லுமோ என்று?
கம்சன் வந்தான்,பிள்ளை தனை கையில் ஏந்தி,வீசிட்டான் சுவற்றை நோக்கி,

வீசிய பிள்ளை,மேலே உயர்ந்தது ,அந்தரத்தில் நின்றது,அழகாய் சிரித்தது 
மாய தேவியவள்,மாயவனின் சோதரி,எச்சரிக்கை விட்டால் கம்சனுக்கே!
அடே!கம்சா!உன் அழிவு நெருங்கியது!உனை அழிக்கும் பிள்ளை நானல்ல!
அது பத்திரமாய் வளர்கிறது,வேண்டிய இடத்தில் என சத்தியத்தையும் உரைத்து 


மாயமாய் மறைந்தது மாயை!மனதினில் கடும் பயம் உறைய,கடும் சொல் உதிர்த்து 
பூட்டிய கதவு ,பூட்டியபடி இருக்க,இது எப்படி சாத்தியமென கர்ஜித்தான் 

கடிந்திட்டான்,காவலரை,கலவரமாவது,இப்போது அவன் முறையானது!
தன் எதிரி எங்கே என தேடி,தேடி அலைகின்றான் கம்சன்.காண்பானோ மருகனை?



கிருஷ்ண லீலா-2


கவிதை வழி மட்டும் இன்றி வண்ணப்படம் வாயிலாகவும் கதை தொடர்கிறது!

மாயகண்ணன் பிறந்தான் 
அழகிய மதுரா நகரினிலே,அதிசய சிறை கூடத்திலே!
கம்சன் அவன்,சூதில் தப்பி,தேவகி-வசுதேவர் துயர் துடைக்க,

பெற்றவர் சுயநினைவை நீக்கி,வாயில் காப்பான் மயக்கமுற,
மந்திர வித்தை பல காட்டி ,தாய்மாமன் அவன் கதை முடிக்க,
பிறப்பிலேயே விந்தையாய்,அழாத குழந்தையாய் 
பேசும் அதிசயமாய்,மாயன் அவன் மண் புகுந்தான்!




குட்டி கண்ணன் பயணம்.
மாயன் அவன் ,தேவகியின் மணிவயிறு வாய்த்தவன்,
யாரும் அறியா பொழுதினிலே,மண்ணுலகம் வந்துவிட்டான்.
பிறந்த குழந்தை பேசுமோ?,பேசுமே!அது பரந்தாமன் என்பதனால்.
யாரவன்? மாயவன்,போகும் வழி தானே சொன்னான் தகப்பனிடம்.
என்னை,இவ்விடம் விடுத்து ,கோகுலம் சென்று சேரும்-என!
வசுதேவர் தலையில் சுமக்க,சிறை கதவு தானாய் திறக்க,
வாணம் மழையை கொட்ட,ஆதிசேசன் குடை பிடிக்க,
யமுனை நதி பாதை தர,கண்ணனவன் பயணம் செய்தான்.


கோகுலத்தில் ,நந்தரின் இல்லம் ...
நடு இரவினிலே,மாயா தேவி ,யசோதை தன் கர்பம் விட்டு வந்தாள்,
வசுதேவர் தான் சுமந்து வந்த குழந்தையை யசோதை அருகில் இட்டு,
மாயாதேவியை மாற்றி விட்டார்,வந்த வழி திரும்பி சென்றார்.
யாரேனும் அறிவாரோ மாயவனின் மாயத்தை ?


கிருஷ்ண லீலா-1


கவிதையில் கதைகள் என்ற இந்த புதிய பகுதியில் என்னுடைய பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இதில் முதலில் கண்ணன் கதைகளை கவிதையாக [நான் கவிதை என்று எண்ணியதை ] indusladies  பதிவு செய்ததை மீண்டும்  தொகுத்து இங்கே தருகிறேன்.

இந்த பாடல்கள் உண்மையில் -ஹிந்தி பக்தி இலக்கியத்தின் மஹா கவி சூர்தாஸ் அவர்களின் "சூர் சாகர் சடிக் "என்பதின் மொழி மாற்றம் .அவருடைய கவிதைகளை படிக்கும் போது ,மற்றட்ட மகிழ்ச்சியில்,உணர்வு மிகுதியில் ,பரவசமான ஒரு மனநிலையை அனுபவித்து உள்ளேன்.அதனை அனைவருடனும் பகிரவே இந்த முயற்சி.

கண்ணனின் குறும்புகளை ,சூர்தாஸ் வர்ணிக்கும் போது ,நாமே அந்த யசோதா மையாவாய் மாறி அனுபவிப்போம்.அதனை என் சிற்றறிவிற்கு  [தமிழ் புலமையிலும் மற்றும் கணினி உபயோகத்திலும் ] எட்டிய வகையில் இங்கு தருகிறேன்.தவறுகள் இருப்பினும்,ரசம் குறைந்திருப்பினும் ,அதனை மறந்து [வேறுவழியும் இல்லை உங்களுக்கு] இதனை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.
முதலில் கண்ணன் வருகிறான் இங்கே.....

கிருஷ்ண லீலா-1
கண்ணன் வந்தான் ,எங்கள் கண்ணன் வந்தான் !
மதுரா நகரில் ,பிறப்பெடுக்க கண்ணன் வந்தான்!
தேவாதி தேவர்,முனிவர் மகிழ கண்ணன் வந்தான்!
கந்தர்வர் பூமாரி பொழிய , கண்ணன் வந்தான்!
வண்டுகள் ரீங்காரமிட,கண்ணன் வந்தான்
மானிடர் மகிழ்வுறவே,கண்ணன் வந்தான்!
அரக்கர் தனை அழித்திடவே ,கண்ணன் வந்தான்!
தேவகி துயர் துடைக்க கண்ணன் வந்தான்!
யசோதை கொஞ்சி மகிழ கண்ணன் வந்தான்!
அனைத்துலகும் வாழ்விக்க கண்ணன் வந்தான்!
கண்ணன் வந்தான் ,எங்கள் கண்ணன் வந்தான் !