Monday, 16 June 2014

கிருஷ்ண லீலா-8


ஆலிலையில்  கிருஷ்ணன்,

நந்தரின் இல்லமது,அமருலகின் தேவரெல்லாம் வணங்கும்,
பாற்கடல் பள்ளிகொண்ட பரந்தாமனின்  இருப்பிடமானது.
முற்றத்திலே உள்ள தூளியிலே சயனித்திருந்தான்,கண்ணபிரான்,
கை கால் ஆட்டி,பொக்கை வாய் சிரிப்புடனே,அறியாபிள்ளையாய்!


தன் கால் கட்டை விரல் தூக்கி வாயினிலே வைத்தான்,கண்ணப்பன்,
கடல் அலை சீற்றமாய் சீறியது வானம் வரை ,புவி நடுநடுங்கியது,
மேகம் கடும் கர்ஜனை செய்ய, வானில் வண்ண கோலமிட்டது மின்னல்.
கணப்பொழுதில் வந்த மாற்றம்  ஏதேன அறியாமல் கலங்கியது ஏழுலகும் 

 நாரதரும் என்ன இந்த விபரீதம் என நான்முகனை வினவ,தேவரெல்லாம் 
கயிலை நோக்கி அபாய கரம் நீட்ட,சிறுமுறுவல் தந்து புதிர் அவிழ்த்தார்,
மால் ஒரு பாகாம் கொண்ட சங்கரனார்,இது தன மனையாளின் சோதரனார் 
விளையாட்டை செய்த லீலை என்று.ஏதும் விளங்காமல் விழியுயர்த்த.

கால் கட்டைவிரல் தனை வளைத்து,தன் அதரம் தனில் வைத்து சுவைத்ததனால் 
வந்த விளைவு இது, ஆலிலையில் கிருஷ்ணன் ரூபம் இது, இந்த வடிவம் 
தாங்கி கண்ணன் இருந்தால் பிரளயம் வரும் என்றொரு ஐதீகம்,நொடிபொழுதில் 
மாயம் செய்த மாயவன்,விரைவினிலே விடுவித்தான் விரலை வாயை விட்டு.




காக அரக்கன்

கம்சன்,தன் உயிர் மேல் கொண்ட பற்றின் காரணமாய் 
பூதனயை அனுப்பிய முதல் முயற்சி தோற்ற பின்னே 
காக்கை வடிவம் கொண்ட அரக்கனிடம் ஒப்புவித்தான்,
பாலகனை பலிக்கொண்டு வரும் பெரும் பணியை.

சிறு பிள்ளை விணை தீர்க்க நான் வேண்டுமோ என இளப்பமாய் 
எண்ணி விரைந்திட்டான் காக்கணும் இடையர்கள் அகம் நோக்கி.
நந்தரின் மாளிகை  மேல் பறந்து வந்தமர்ந்தான் முற்ற மதிலினிலே.
அக்கனமதில் உறங்கிட்ட மகனை விட்டு ,அன்னையவள் அகன்றிருக்க,

தக்க சமயம் என இறங்கிட்ட அரக்கன், கண்ணன் அருகினிலே சென்று,
தன் அலகினாலே கொத்த முற்பட்டான்,அவனை கையால் திருகிட்டான் மாயன்
கண்ணன் கையில் குற்றுருயிராய் இருந்த காகன் கரைந்திட்டான் உயிர்பிச்சை 

கேட்டு,மனம் இறங்கிட்ட மாதவன் காகனை  திருப்பி அனுப்பிட்டார் கம்சனிடம்,

காக அரக்கன்,அலறி துடித்தபடி ,விரந்திட்டான் மதுரா நகர் நோக்கி கம்சனிடம்.
கோகுலத்தில் இருப்பது, மானிட குழந்தயன்று,தெய்வமே மனிதனாய் வந்தது,

இனி,அதனிடம் நம் ஆட்டம் செல்லாது,நம்மினமே அழியும் அவன் கையால் என்றான்!

Wednesday, 11 June 2014

கிருஷ்ண லீலா-7


பூதனை வதம்  


மருகனை காணாமல் மருகினான்  மாமனாம் கம்சன் மதுராவில்.
சோதரி தொலைத்த மகனை சீரட்டவோ, இல்லை சிரம் வெட்ட.
கோகுலம் கொண்ட கோலாகலம் சொல்லாமல் சொல்லியது 
இங்கு குழந்தை பிறந்து மறைந்த  அன்று அங்கு மலர்ந்ததை 

தன்  உயிர்க்கு காலன் என ஐயம் கொண்டாலே போதும் கம்சனுக்கு 

அக்கனம்  பிறந்த அத்தனை சிசுவையும் சிரமறுக்க அனுப்பிவைத்தான் 
பூதம் போல் உரு கொண்ட அரக்கியாம்,மாயம் பல கற்ற மாபாதகியை 
குழந்தை தனை யமனுலகம் அனுப்பிவைக்க, ஏவினான் பூதனையை.

கோரா முகம் கொண்டவள் கோமள வல்லியாய் கோலமிட்டு 
அழகு சுந்தரியாய்,கபட உரு கொண்டு,கோகுலத்தில் உட்புகுந்தால் 
பால் சுரக்கும் ,புண்ணிய தனங்களிலே விஷம் தடவி விரைந்திட்டாள்,
கண்ணன் தனை காண வரும் மாது போல் ,அவனருகே அமர்திட்டாள்,


யசோதையின் பாக்கியத்தை பற்பல சொல்லால் வாயார புகழ்ந்திட்டால் ,
தன் மகவுதன் புகழ்ச்சியினால் மயங்கிட்ட அன்னை அரக்கியென்று  

அறியாமல் முழுமனதாய் நம்பி,உறங்கும் மகனை விட்டு சற்றே 
அகன்றிட்டாள் நேரம் செல்ல,செல்ல,ஒவ்வொருவராய் வெளி செல்ல,

யாருமற்ற நேரத்திலே,மாதவனை ஏந்திட்டால் தன் கரத்தினிலே 
தன் விஷம் தோய்ந்த மார்பினின்று பால்தனை புகட்டிட்டாள் 
பால் மட்டும் அருந்தும் பாலகனா இந்த மாயன்,பாலுடனே சேர்த்து 

அவள் உயிர் தனையும்  உறிஞ்சிட்டான்,அலறிட்டாள்  அரக்கி.


தன் உயிர் போவது உறுதி என அறிந்திட்ட பூதனை,குழந்தையை
குழந்தையென வந்த தன் காலனை விலக்கவும் இயலாமல் அவனுடனே 
வீட்டை விடுத்து  காடு புகுந்தாள்,தன் உயிர் போகும் வேளையில் 

வேதனையில் வீறிட்டாள் ,வீழ்ந்த பின்னே,தன்  உருவம்  பெற்றாள், 

மலைபோல் வீழ்ந்திருந்த பூதனை மேலே கண்ணன் வீற்றிருந்தான் 
அவதார நோக்கில் முதல் பலி அரங்கேற்றி முறுவல் புரிந்திருந்தான் 
அன்னையவள் அலறி வந்தநிலை கண்டு தானும் சேயாகி சினுங்கிட்டான் 
நிகழ்ந்த லீலை அறியாத யாதவ இனம் அதிர்ச்சியில் உறைந்திட்டது.



Wednesday, 4 June 2014

கிருஷ்ண லீலா.6

யசோதையின் தாலாட்டு.

ஆயர் பாடி மாளிகையில் மாயவனை துயில செய்ய தொட்டிலிலே இட்டு,
அவன் மலர்முகத்தில் கண் பதித்து தாய்மை பொங்க முத்தமிட்டு,அள்ளி 
அணைக்கின்றாள் ஒரு பொழுது,கொஞ்சி குலவுகிறாள் மறுபொழுது !
கொஞ்சுமொழி வார்த்தைகளால்,மெல்லிய குரலெடுத்து முனுமுனுத்தாள் 
தாலாட்டு பாடலிலே நித்திரையை அழைகின்றாள்அன்பான யசோதை!

நித்திரா தேவி நீ ,தச்சனமும் நில்லாமல் இப்பொழுதே வந்திடுவாய்.,

என்மகவுதனை  ஆரத்தழுவி நீ உன் வசமே பத்திரமாய் வைத்திடுவாய் 
அவன் கனவதனில் இனிமைதனை சேர்த்து இன்பமதை தந்திடுவாய்.
ஆயிரம் கோப,கோபியர் அவனை ஆரத்தழுவ ஆர்வமுடன் தவமிருக்க,
அவனருகே செல்வதற்கு நான் ரகசியமாய் உனை அனுமதிப்பேன் 

நித்திரை பெண்ணே நீ வேறெங்கும் செல்லாமல் என் அகம் வந்துவிடு 
என் செல்ல கண்ணையன் உன்னை ஆசையுடன் அழைக்கின்றான் 
தாமதம் இன்றி நீ தாவி அவனிடம் வந்துவிடு ,என அன்னையவள் 
ஆசையுடன் தாலாட்ட,தன லீலை தனை காட்ட தக்க தருணமிது என்று 
தன் இமை மூடி,அதரங்கள் சப்புக் கொட்டி பாவனை காட்டிட்டான் கண்ணையன் 

அன்னையின் அவள் தன் அழைப்பின் பேரில் நித்திரையும் வந்திட்டால்
கண்ணனிடம் தான் மயங்கி அவள் ,அவனிடமே சரணடைந்திட்டால் என 
கண்ணன் ,அவன் உறங்க கண்டு,யசோதை தன் தாலாட்டை நிறுத்தி,அருகே
உள்ளவரை அமைதி காக்க சைகை செய்து ,அனைவரையும் அனுப்பிவிட்டு,
வெளிச்சம் தனை மறைத்து விட்டு,பட்டு துகில் கொண்டு போர்த்திவிட்டு 

தன் மகன் எழுவதற்குள் மற்ற வேலை முடிக்க செல்ல யசோதைமுனைகையிலே,

செல்ல சினுங்கள்,சில செய்து,தனகத்தே அழைத்து கொண்டான் மாயக்கண்ணன் 
இதுபோலே,உறங்குவதும்,விழிப்பதுமாய்,மாதவன் விளையாடி ,தாய்மையிலே 
உறவாடி,வையகத்தில் இவள் போலே என தாய்மைக்கு ஓர்  பெயர் வழங்கி, யசோதை 
செய்த பாக்கியம் என்னவென்று பாரில் உள்ளோர் வியக்க வைத்தான் பரந்தாமன்!