Friday, 15 July 2016

கிருஷ்ண லீலா!-12

கிருஷ்ண லீலா!-12

ஸ்நானம் செய்ய மறுத்தல்.

கிருஷ்ண லீலையினை கேட்பவர்கள் ,மெய்மறந்து நின்றனர்.
கோபிகைகள்,கண்ணன் லீலையினை பெருமையாக பேசினர்
வீதியிலே ஒரு கோபி,பானையுடன் செல்லும் மற்றவளை அழைத்து,
காண்பதற்கு அரிய காட்சியினை காட்டி மகிழ்ச்சியினை பகிர்ந்தாள்

அன்னை யசோதை,வரமாக வந்த வரதனை வலிய அழைக்கின்றாள்,
 தைலம்,அரப்பு,வாசனை பொடிகளை தன் பின்னே மறைத்து வைத்து,
என் அருமை மோகனனே,என் உயிர் மூச்சே,அழாமல் நீ வந்திடுவாய் 

நறுமணம் கொண்டு நின் மேனி மிளிர்ந்திடவே நீர் வார்த்துக்கொள்வாய் 

 வெண்ணையும் ரொட்டியும் காய்ச்சிய பாலும் காத்திருக்கு கண்ணையா 

சந்தனமும் பன்னீரும் நின் மேனிதனை குளிர்வித்திடும்  பொன்னையா,
கருத்த நின் மேனியை பொன்மயமாய் ஆக்கிடுவேன் நீ வா என்னையா 

கொஞ்சி,கெஞ்சி நீர்வார்க்க அன்னையவள் அழைத்து நின்றாள் 

அன்பாக அழைக்கும் காரணம் தெரிந்தவுடன் தவியாய் தவித்திட்டான்,
முற்றம் முழுவதுவும் உருண்டு,பிரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்திட்டான் 

பாற்கடலின் வாசன் நீர் வார்க்க அடம் பிடிக்கும் காட்சிதனைக் கண்டு 
தேவரும் முனிவரும் கந்தர்வரும் விண்ணவரும் அதிசயித்திருந்தனர் 

கதை கேட்ட  கண்ணன்

விஷ்ணு புராணம் கேட்க மூவுலகும் தவமிருக்க  அவன் தன் 

அவதாரக் கதைகளை அகிலமெல்லாம் நாளும் ஜெபித்திருக்க
யது வம்சத்தில்  வசுதேவன் மகனாக பிறப்பெடுத்த தெய்வம் 

தன் ரகுவம்ச ராமகாதையை அன்னையிடம் செவிமடுத்தான் 



யசோதையின்  மடியினிலே வீற்றிருந்து  ராமகதை கேட்டிருந்தான் மாயக் கண்ணன் 
அன்னை மனம் அறிந்திட்ட ஆனந்த ரூபன் ஊம்,கொட்டி கதை கேட்க உடன் பட்டான்,

 இப் புண்ணிய அயோத்தி நாட்டினிலே தசரதன் எனும் மன்னன் ஆண்டுவந்தான்,
சூர்யகுலமாம் தன் ரகுவம்சம் விளங்க தசரதன் தவமிருந்தான் தவப்புதல்வனுக்காய் 


புத்திர யாகம் செய்து வரமாக பிள்ளை பேரை பெற்றான்.
தசரதனின் குலம் தழைக்க வந்தன  வைரங்கள் நான்கு

ராம,பரத,லட்சுமண ,சத்ருக்கன் என்ற நாமங்கள் கொண்டு 
அனைவரிலும் மூத்தவன் ,முன்னவன் ,புருசோத்தமன் 

பண்பிலே சிறந்தபார் புகழும்  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி

ராமனுக்கு தம்பியாய்  மூன்று ரத்தினங்கள், அன்னையாய் மூன்று முத்துக்கள் 
சிவதனுசை தான் ஒடித்து ,ஜனகர் மகள் ஜானகியை கைத்தலம் பற்றினான் 
என ராமகாதை சொல்லி ராவண சம்ஹாரம் ,ராமனது பட்டாபிசேகம் என 

அன்னை அடுக்கிவந்த கதை கேட்டு ,லட்சுமணா எடு என் கோதண்டத்தை 
என நந்த நந்தன் தனை மறந்து இயம்பி நிற்க பிரம்ம ரகசியத்தை அறியா அன்னையவள் தான் சொன்ன கதையின் பாதிப்பே இது என எண்ணுகிறாள் 
கதை கேட்டு உறங்கிட்ட மகனை கண்டு மனம் நெகிழ்ந்திருந்தாள் 


அடுத்த அசுரவதம் 
தான் மகனாய் வந்த அதிசயம் இவனோ என நினைவில் மூழ்கினால் 
முதன் முதலாய் மனை விட்டு மாயவனை எடுத்து சென்ற நாள் அது 
அந்நாளும்  அதிசயம் அநேகமுற்ற நாள் என்பதறியாமல் அவள் 
கோகுலத்து கோபியரை அழைத்துக்கொண்டு யமுனை வந்தாள் 

 மங்கள ஸ்நானம் செய்வித்து தாலாட்டி தூங்க வைத்தாள் 

மாடுகள் பூட்டாத வண்டியின் அடியினிலே தொட்டியிட்டு படுக்க வைத்தாள் 
மற்றவரை கவனிக்க சற்று நேரம் சென்றிருக்க ,குழந்தை வீரிட்டு அழுதது 
தன் சின்னச்சிறு கால்களால் வண்டியினை பதிவிசாக உதைத்தது,
பறந்து சென்ற வண்டியது அந்தரத்தில் ஆட்டம் ஆடி ஆவிதனை விடுத்தது 

மாமன் அவன் கம்சன் தன் மருகனை மாய்க்கவென்றே அசுரனை அனுப்ப 
சகடாசுரன் வண்டியாய் மாற்றுரு கொண்டு கண்ணனை கொள்ள காத்திருந்தான் 
காலன்  காத்திருந்தான் அசுரனுக்காய் கண்ணன் திருவடியில் மறைந்திருந்தான் 

துட்டனுக்கு துட்டனாய் தூக்கி எறிந்த வண்டியில் துடித்து  மாண்டான் அசுரன்  
 துட்ட சக்தி இதுவென மந்திரம் சொல்லி மாயவனை காத்து நின்றாள் அன்னை.


கண்ணனை கவர்ந்து செல்ல திருணாவர்த்தன் என்ற அரக்கன் வந்தான் 
வீட்டை விட்டு வெளியேறி விண்ணளவு செல்லும் வரை எல்லாம் சரிதான் 
விண்ணில் விரையும் போது விண்ணளந்தான் கணம் மிகுதியாய் கணத்து விட  
கணம் தங்காமல் கண்ணனை கீழே தள்ளிவிட முயற்சி செய்தான் மூர்க்கன் 
அவன் கழுத்தை இருக பற்றி நின்றான் பரந்தாமன் பளு தாங்க இயலாத 
 அரக்கன் அரற்றி அக்கணமே ஆகாயம் விட்டு புவியில் வீழ்ந்து உயிர் விட்டான் 

நாமகரணம் 
யாதவர் குலகுருவாம் கர்க்கமகரிஷி,நாமகரணம் சடங்கு செய்ய கோகுலம் வந்தார்
நந்தரும்,யசோதையும் அன்போடும்,பக்தியுடனும் வணங்கி கர்க்கரை வரவேற்றனர்
எளிய முறையில் வைபவத்தை வைக்க நந்தருக்கு ஆலோசனை சொன்னார் குருவர் 
ரோகிணியின் மகன் மூத்தவன் நற்பண்புகளால் மற்றவரை மகிழ்விப்பான் ராமன் 

 பலமிக்க மன்னவன்  எனவே பலராமன்,இரு குடும்பத்தை இணைப்பதனால் சங்கர்ஷன் 

யசோதை மகன்  இளையவனை நோக்கி கடவுளின் அவதாரம் என அறிந்து வணங்கி  
கருமை நிறம் கொண்டதனால் கிருஷ்ணன்,கண்ணன் என்றும் பெயர் சூட்டி,
இறைவனுக்கு பெயர் சூட்ட தாம் பெற்ற பேரினை தம் அகத்துள்ளே மகிழ்ந்தார். 
மகனின் நினைவலையில் முழ்கி திரும்பி வரும் முன்னே மகனும் விழித்திருந்தான்.
யசோதை தாயே என்ன தவம் செய்தாய் என எங்களுக்கும் செப்புவாய் நீயே!